ஒலி்த்தொல்லை ஏற்படுத்தும் வாகனங்கள்
தற்போது நமது நகர்ப்புறத் தெருக்களில் ஒரு கடைவாசலில் நின்று நிம்மதியாகப் பொதுத்தொலைபேசியில் பேசமுடிவதில்லை, காரணம் போக்குவரத்து வாகனங்களின் அளவுகடந்த இரைச்சல் நமது காதுகளைப் பிளக்கிறது. மருத்துவமனைகள் அமைந்திருக்கும் இடங்களில் கண்டிப்பாக ஒலி எழுப்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அதிக ஒலியினால் அதிர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு இருப்பதே இதற்குக் காரணம்.
ஓயாத இரைச்சல் தரும் சூழ்நிலையி்ல் வசித்தால் நமது காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் சக்தியை இழந்து விடும், மேலும் நினைவாற்றலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
55 டெசிபல் அளவிற்கு மேலாக சத்தம் எழுப்கக்கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டாலும் அதை யாருமே கடைபிடிப்பதாகத்தெரியவில்லை. 100 டெசிபல் வரையில் தங்கள் வாகனங்களின் ஒலி்ப்பானை அலற விடுகின்றனர்.
ஆட்டோக்களும், சில இருசக்கர வாகனங்களும் காற்று ஒலிப்பான்களை திடிரென்று அலறவிட்டு நடைபாதையில் நடப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி திடுக்கிட வைப்பதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
சிலர் தங்கள் ஒலிப்பான்களை நாய்குரைப்பதைப்போல மாற்றி வைத்து்க் கொண்டு தெருவில் நடப்பவர்களை பயமுறுத்துகின்றனர். மேலும் சில ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் காரின் ஹாரனைப்போன்ற சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதைக்கேட்கும் நடந்து செல்பவர்களும், மற்ற வாகனங்களும் தங்கள் பின்னால் கார்தான் வருகிறது என்று தவறாக எண்ணி, அதிக இடம்விட்டு விலகிச் செல்கின்றனர்.
இதனால் அவர்கள் சில நேரங்களில் பள்ளங்களில் விழுகின்றனர். இவைபோன்ற குற்றங்கள் தவிர்க்கப்படவேண்டும். ஒலிமாசை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சத்தையும் தொல்லையையும் ஏற்படுத்துகின்றவர்களை தகுந்த தண்டனை கொடுத்து திருத்தவேண்டியதும் அவசியம்.
ஓசை கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருந்தால் இசையாகும், காதுகளுக்கும் இனிமை தரும். அதுவே அளவைகடந்தால் ஒலித்தொல்லை இரைச்சலாகி, ஒலிமாசை ஏற்படுத்தும். செவிப்புலனை பாதிக்கும். இது நமக்கு மட்டும் அல்ல விலங்க பறவைகளுக்கும் உண்டு.
சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் ஒரு நூற்றாண்டு பழமையான உயிரினப்பூங்கா இருக்கிறது. இந்த பூங்காவைச் சுற்றிச் செல்லும் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன. இந்த வாகனங்கள் மிகவும் அதிகமான சத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த சத்தத்தினால் உயிரினப்பூங்காவில் வாழும் விலங்குகளும், பறவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. இவற்றின் அன்றாட வாழ்க்கையும், இனப்பெருக்கமும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
ஒலிமாசை தடுத்து உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சாலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இவ்வாறு செய்வதால் வாகனங்கள் ஏற்படுத்தும் அதிகசத்தம் பூங்காவுக்குள் நுழையாமல் தடுக்கப்படும். ஒலிமாசினால் பறவைகளும், விலங்குகளும் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படும். நம் நாட்டில் இதை எல்லாம் யாரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.
No comments:
Post a Comment