Sunday, June 27, 2021

பெரிய புராணம் முன்னுரை

 நான் எழுதி பாபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் பெரிய புராண நூலின் முன்னுரையில் சிறுபகுதி.

பெரியபுராணம் என்று இந்தநூலுக்கு பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதன் அருமை பெருமைகள் அளவுகடந்தது அதனால் இது பெரிய புராணம் எனப்பட்டது. இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாயானாருடைய வாழ்க்கை சரிதமும் புராணம் என்ற பெயரோடு காணப்படுகிறது. இவ்வாறு பல புராணங்களை பெற்ற காரணத்தினாலும் இது பெரிய புராணம் என்று போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல அன்பிலும், பக்தியிலும், தானம் கொடுப்பதிலும், சிவபூசைசெய்வதிலும் பெரியவர்களான பல மகான்களுடைய சரித்திரத்தை சொல்கின்ற காரணத்தினாலும் இது பெரியபுராணம் என்றுவழங்கப்படுகிறது.

       மற்ற அனைவரும் இறைவனிடம் உலகப்பொருட்களையும்,அழியக்கூடிய செல்வத்தையும் , ஞானமிகுந்த சிலர் மோட்சப்பேற்றையும் கேட்பார்கள். ஆனால் பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் இறைவனை கும்பிடுவதைத் தவிர வீடு பேறான மோட்சத்தைக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறார்கள். இது ஆச்சரியமான உண்மை,

இதனை

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஒடும்செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்      என்று சேக்கிழாரே பாடிஇருப்பதன் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

 இவ்வாறு இறைவனைத் தவிர வேறு எதையும் வேண்டாத பெரிய  உள்ளம் கொண்டவர்களது சரித்திரத்தைச் சொல்வதாலும் இதற்கு பெரிய புராணம்  என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகையையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும், அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் இந்தப் பெரிய புராணத்தை மிகவும் விரிவாக சொற்சுவை, பொருட்சுவை, எல்லாவற்றுக்கும் மேலாக பக்திச்சுவை சொட்டச்சொட்டப் பாடி கொடுத்திருக்கிறார்.

       சிவபெருமானுடைய பேரருளைப் பெறுவதற்கு என்ன தகுதி தேவைப்படுகிறது ? மிகப்பெரிய செல்வந்தராக இருக்க வேண்டுமா ? வேதசாஸ்திரங்கள் படித்து அவற்றில் வல்லவராக இருக்க வேண்டுமா ? உயர்பதவி வகிக்க வேண்டுமா ? மன்னராக இருந்தால் தான் மகேசன் அருள் பெறமுடியுமா ? தாழ்ந்த குலத்தில் தோன்றாமல் உயர்குலத்தில் பிறக்க வேண்டுமா?  இறைவனை சாஸ்திரங்கள் கூறும்  முறைப்படிதான் வழிபடவேண்டுமா ? என்ற இது போன்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பெரிய புராணம் இல்லை இல்லை இல்லவே இல்லை என்ற பதிலைத்தான் அளிக்கிறது.

முத்தீ வளர்த்து வேள்வி செய்த அந்தணராகிய நீலநக்கர் முதலாக, சட்டி செய்து கொடுப்பதை தொழிலாகக் கொண்ட திருநீலகண்டர் வரை எல்லாத் தொழில்களைச் செய்தவர்களுக்கும் பேதமில்லாமல் இறைவன் அருளை வாரி வழங்கி இருக்கிறான்.

அந்தக் கால சமுதாயம் சாதிப்பிரிவினைகளினால் துண்டாகிக் கிடந்தது. அப்படி பிளவுபட்ட மனிதகுலத்தை சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தி என்ற கயிற்றின் மூலமாக  இறுக்கக்கட்டிய நடைமுறை வைத்தியத்தை பெரியபுராணம் மிக அருமையாக தெரிவிக்கிறது.

கழுத்தளவு நீரல் நின்று உருத்திர ஜெபம் செய்து இறைவனது அருளைப் பெற்றவர் உருத்திரபசுபதியார். இது போல எந்தவொரு பூசை ஜெபம் தவம் ஆகியவற்றை பெரிய அளவில் செய்யாமல், அப்பர்பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டு  ,அவரை நேரில் பார்க்காத போதிலும் ,அவர் பெயரால் தண்ணீர்பந்தல் வைத்தும், தானதர்மங்கள் செய்தும் வழிபட்டஅப்பூதி அடிகள் போன்றவர்களும் பெரிய புராணத்தில் உண்டு

      மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும், இறைவனுக்கு இணையாக தெய்வத்தன்மை பெற்ற மனிதர்களும் போற்றி வழிபட வேண்டியவர்கள் என்பதை பெரியபுராணம் வற்புறுத்துகிறது.

இந்தநூலில் ஏழு முதல் பத்துவரையில் உள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள் பெரியபுராணத்தின் ஒப்பற்ற தன்மை,  புலப்படும். சிவனடியார்கள் பிறந்த குலம் , குருவின் மூலமாக முக்தி பெற்றவர்கள், சிவலிங்கத்தினால் முக்தி பெற்றவர்கள், சிவனடியாரால் முக்தி பெற்றவர்கள், ஆகியோரைப்பற்றி அறிந்து ஆச்சரியப்பட முடியும்.

அக்காலத்தில் ஆதி திராவிடர்கள் சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்துள்ளது என்பதை நந்தனார் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர், அதைப்புறந்தள்ளி விட்டு, தன்னுடைய  தேவாரப் பாடல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்புவதற்கு தாழ்ந்த குடியில் தோன்றிய திருநீலகண்டரைத்தான் வைத்திருக்கிறார். அதோடு மட்டும் அல்ல,அந்த அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச் செல்கிறார்.

தம் இல்லத்தில் படுத்துறங்க இடம் இல்லாத நிலையில் திருநீல நக்கர் தாம்  வேள்வி செய்த மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில் படுத்து உறங்க அனுமதிக்கிறார்.    

பெண்மைக்கு பெருமை சேர்ப்பதற்கும், பெண்ணை தெய்வமாக போற்றுவதற்கும், பெண் நினைத்தால் அரசனையே மனமாற்றம் செய்து நல்வழிப்படுத்தமுடியும் என்பதற்கும் பெரியபுராணம் சாட்சியாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே பெண்மைக்கு ஏற்றம் தந்தவர் சேக்கிழார். பெரிய புராணத்தில் திலகவதியார், மங்கையர்க்கரசியார், மாதினியார், சிறுத்தொண்டரின் மனைவியார், என்று பலதரப்பட்ட பெண்களின் உயர்குணங்கள் , கற்புநிலை ஆகியவை போற்றப்பட்டுள்ளன.

பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில், உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்தவர் திலகவதியார், அவர் எதிரே வரக்கூடாது, அவர் முகத்தில் விழிக்கக்கூடாது, என்று மூடநம்பிக்கையோடு மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர் திருநீறு வழங்கித் தனது தம்பி திருநாவுக்கரசரை மதமாற்றம் செய்திருக்கிறார்.  தம்பியை சைவத்திற்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமையை சேக்கிழார் திலவகதியாருக்கு வழங்கி இருப்பதை இதன் மூலமாக நாம் அறிய முடிகிறது.

Saturday, June 26, 2021

ஊனுக்குள் ஒளிந்த ஈசன்

 


சி்த்தர்கள் பதினெண் சித்தர்கள் என்றும், நவகோடி சித்தர்கள் என்றும் பலவகையான தொகுப்பாகக் காணப்படுகின்றனர். அவர்கள்அனைவருமே இந்தியாவில் பல இடங்களிலும் பரவலாக இருந்து ஆன்மீகத்தை வளர்த்து இருக்கிறார்கள். பொதுவாக பார்க்கும் போது சித்தர்கள் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஆதரிப்பவர்களைப் போல தோன்றுவது இயல்பு. இதற்கு உதாரணமாக ,

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா   என்பதையும்

நட்டகல்லை சுற்றிவந்து நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிநின்று மொணன்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சட்டிசுட்ட சட்டுவம் கறிச்சுவை அறியுமோ  என்ற பாடலையும் சான்றாகக் காட்டுவார்கள்.

சித்தர்கள் போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்தார்களேதவிர கடவுளை மறுக்கவில்லை. வெறும் கல்லில் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் போலிகளையே அவர்கள் சாடினார்கள். மக்களுக்கு நல்லறிவை புகட்டினார்கள். உண்மையான தெய்வம் மனத்தில் இருக்கிறது என்றுஉபதேசம் செய்தார்கள். 

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!

இவ்வுடம்பு வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு பொருள் என்று முதலில் தாம் எண்ணியதாகவும் பின்பு உடம்புக்குள்ளே தன்னை உயர்நிலைக்கு உயர்த்தும் பரம் பொருளைக் கண்டு கொண்டேன்.அதன் பிறகு தான் தம் உடம்பைப் பேணிக் காப்பதாகவும்  திருமூலர் குறிப்பிடுகிறார்.

தேனுக்குள் இருக்கின்ற இனிப்பு, சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்ற ஆராய்ச்சி  பயன் அற்றதோ அதனைப் போன்றதே இறைவனைப் புற உலகப் பொருட்களில் தேடுவதாகும். தேனுக்குள் இருக்கின்ற இன்பம் செறிவுற்று இருப்பதனை அதனை அருந்தியவர்களால் மட்டுமே அறிய முடியும்.

அது போன்று உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை நுகர்ச்சியினாலேயே உணர முடியும் என்பதனைத், “தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ, பாருக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல், ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே என்று தெரிவிக்கிறார் திருமூலர்.

நான்முகனும் நாராயணனும் தங்கள் முற்சியால் இறைவனைத் தேடிக் கண்டுவிட முடியும் என்று முன்னொரு காலத்தில் பலயுகங்கள் முயன்று தோல்வியுற்றனர். எனினும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையான அப்பெருமானை என் அன்பினால் என் உடலுக்குள்ளே தேடிக்கண்டேன் என்பதனைத்,

 “தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்

என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார்.  இறைவனை வெளியே தேடாதே, உள்ளே தேடு என்று இதைத்தான் நமது சித்தர்களும் சற்று கடினமான வார்த்தைகளில் குறிப்பிட்டனர். பதினெண் சித்தர்களில் பெரும்பாலோர்  பிரசித்தி பெற்ற கோயில்களில் சமாதி கொண்டிருக்கிறார்கள். சில சித்தர்கள் சிவத்துடனே இரண்டறக் கலந்து அந்தக் கோயில்களில் அருள்பாலித்து வருகிறார்கள். சில சித்தர்கள் தனித்தனியாக ஜீவசமாதிகளில் தரிசனம் தருகிறார்கள்.

Friday, June 25, 2021

திருக்குறளும் சங்கப்பலகையும்

 

அதிகாரம் -  கல்லாமை – கல்வியைக் கற்காமல் போனால் ஏற்படும் இழிவும், அதைக் கற்பதால் உண்டாகும் புகழும்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் , கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு

கல்வி அறிவு இல்லாதவர்கள் சாதியால், செல்வத்தினால் மேலான பிறப்பை உடையவர்களாக இருந்தபோதிலும் , சாதியால், செல்வத்தினால் கீழ் நிலையில் உள்ள படித்து அறிந்த அறிஞர்களைப் போல பெருமை அடைய மாட்டார்கள்.

இதில் இருந்து கல்வி கற்றுவிட்டால் அது எல்லா வகையான உயர்வையும் கொடுத்து விடும் என்பதை அறிய முடிகிறது. ஐயன் திருவள்ளுவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது. புலவர் புராணம் என்ற நூல் இந்தக் கதையை சொல்கிறது.

சென்னையை அடுத்த மயிலாப்பூரி்ல் நெசவுத் தொழிலி்ல் ஈடுபட்டு உழைத்துச் சம்பாதித்து வந்த திருவள்ளுவர் என்னும் தெய்வப்புலவர் தனது வாழ்க்கையின் அனுபவங்களைத் தொகுத்து அறநூலாகிய திருக்குறளை இயற்றினார்.

அந்தக் காலத்தி்ல் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது. அதி்ல் இருந்த சங்கப்புலவர்கள் பலரும் தமிழ்ப்பயிரை வளர்த்து பெருமை பெற்றவர்கள். வள்ளுவர் தமது திருக்குறளை சங்கப்புலவர்களிடம் சென்று அரங்கேற்றம் செய்து அங்கீகாரம் பெற விரும்பினார்.

திருவள்ளுவர் மதுரை சென்று சங்கப்புலவர்களை சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்கள் நெசவுத் தொழில் செய்யும் இந்த புலவன் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறான் ? என்ற அலட்சியத்தோடு இருந்தனர். அதோடு தாழ்ந்த குலத்தி்ல் பி்றந்த வள்ளுவரை அவர்கள் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதிக்க மறுத்தனர்.

அவர்களைப் பார்த்து திருவள்ளுவர் மிகுந்த மரியாதையோடு, சங்கப் புலவர்களே !நீங்கள் தமிழாராய்ச்சி செய்வதற்குப் பதிலாக எனது குலத்தையும் தொழிலையும் ஆராய்ச்சி செய்வது நியாயமானது அல்ல. எனது நூலைக் குறித்து உங்கள் கருத்தை அறியவே நான் வந்திருக்கிறேன் என்றார்.

அதைக்  கேட்ட புலவர்கள் கடவுள் அருளிய சங்கப்பலகை எங்களுக்குத் துணை புரிகிறது. அந்தப் பலகை எந்த நூலை ஏற்றுக் கொள்கிறதோ அதை மட்டுமே ஏற்பது எங்கள் வழக்கம் என்றனர்.

உடனே வள்ளுவர் சரி அப்படியே ஆகட்டும், நீங்கள் அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்த பிறகு, நான் எழுதிய இந்த திருக்குறள் ஏட்டுச் சுவடிகளையும் அதில் வைப்பதற்கு சிறிது இடம் கொடுங்கள். அந்தப் பொற்பலகை அனுமதிக்குமானால் பிறகு ஆராய்ச்சி செய்து உங்களது மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் .அது அங்கீகாரம் செய்யாமல் போனால் என் நூல் குறை உடையது என்பதை நானே அறிந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.

புலவர்கள் இதற்குச் சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்தனர். பிறகு வள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஏட்டுச் சுவடி பொற்பலகையில் வைக்கப்பட்டது. உடனே தெய்வப்பலகை, மிகச் சிறிய அளவிற்கு சுருங்கியது. இதனால் சங்கப்புலவர்கள் அனைவரும் தொபீர் என்று பொற்றாமரைப் பொய்கையில் விழுந்தனர். அவர்களுக்கு இடம் தராத சங்கப்பொற்பலகை , தன் மீது திருக்குறளை மாத்தி்ரம் ஏந்திக் கொண்டு  மிதந்தது. அவமானம் தாங்க முடியாத சங்கப்புலவர்கள் தண்ணீரில் விழுந்து நனைந்த உடைகளோடு நீந்தி வந்து கரையேறினார்கள்.

பிறகு அவர்கள் வேறு உடை அணிந்து வந்து திருக்குறளை ஆராய்ச்சி செய்தனர். தமிழ்தெய்வமே ஒப்புக் கொண்டதை சங்கப்பலகை தெரிவித்த பிறகு வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது ? அந்தப் புலவர்கள் பொறாமை இல்லாமல் நூலை ஆராய்ந்து அதில் உள்ள கருத்துக்களையும், யாவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துகின்ற நீதிகளையும் படித்து கேட்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டனர். உச்சிமீது வைத்துக் கொண்டாடினர்.

திருக்குறள் எங்கள் தலைக்கனத்தைப் போக்கிவிட்டது, வள்ளுவர் செய்த முப்பால் எங்களுக்கு நல்லறிவைத் தந்து விட்டது, இனிமேல் நாங்கள் முன்னர்போல சங்கப்பலகையில் அமர்ந்து தழிழ் ஆராய்ச்சி செய்வது தகாது என்று சொல்லி திருவள்ளுவரையும் அவர் இயற்றிய திருக்குறளையும்  வாயார மனதாரப்  போற்றினர்.

வள்ளுவரைப் பார்த்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினர். அங்கிருந்த அத்தனை புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாமாலை சூட்டினர். அந்தப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்று அழைக்கப்படுகிறது. வள்ளுவர் பூசனை, மற்றும் வானளாவிய புகழ் ஆகியவற்றோடு திருமயிலைக்கு வந்து சேர்ந்தார். ஆதலால் ஒருவன் இழிந்த குலத்தில் பிறந்தாலும், கல்வி மாத்திரம் இருக்குமானால் உலகத்தி்ல் உள்ள கல்வி கற்றவர்கள் அவனைப் போற்றுவது உறுதி.

Saturday, November 12, 2011

பச்சை நிறமே பச்சை நிறமே

உடல்நலத்திற்கு உதவும் வண்ணக் காய்கறிகள்

நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மூலம் நமக்குத் தேவையான சத்துப்பொருட்கள், ஊட்டசத்துக்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவற்றை நமது உடல் கிரகித்துக்கொள்கிறது. அதன் காரணமாக நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. வுண்ணங்கள் வாழ்க்கையைஅழகாக மாற்றுவதோடு உடல் நலத்தையும் அதிகப்படுத்துகின்றன. ஆகவே வண்ணமயமான உணவை தினசரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சைக் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக கண்பார்வைக் குறைவுகளை சரி செய்ய முடியும் என்பதை நாம் மூன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் பல வண்ணக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும் அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள் , உடலும், உள்ளமும் இளமையாகும் என்று புதிய தகவலை தெரிவிக்கிறது.

கொத்தவரங்காயில் எலும்பு மெலிவைத் தடுக்கும் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. காபி டீ போன்ற பானங்களை அடிக்கடி அருந்திவருவதால் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தை கொத்தவரங்காய் போக்குகிறது. இரவில் நன்கு கண்பார்வை தெரியவும் இது உதவுகிறது.

பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கும், வேலைக்குச் செல்லும் முப்பது வயதுக்குட்பட்ட ஆண்பெண் அனைவருக்கும் பாஸ்பரஸ் உப்பு தேவைப்படுகிறது. மூளை நன்கு செயலாற்;றவும், சிந்திக்கவும் இந்த உப்பு அவசியம். இவர்கள் பச்சைப்பட்டாணியை ஒரு நாள் விட்டு ஒருநாள் குறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சிறு துளி பெருவௌ;ளம் என்பதைப்போல இந்த சிறிய அளவு பச்சைப்பட்டாணி வாழ்க்கையில் மிகப்பெரிய நன்;மைகளை உடல் ஆரோக்கியத்தின் மூலமாக கொண்டு வந்துவிடும்.

பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் விந்துசுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் நியோக்ஸ் ஆந்தின் என்ற கூட்டுப்பொருள் பசலைக்கீரையில் அதிக அளவில் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆகவே எல்லா வயது ஆண்களும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பச்சை நிற காய்கறிகளில் விட்டமின் ஈ சத்தும், பீட்டா கரோட்டினும் உள்ளன. இவைகள் இதயநோயை எதிர்க்கின்றன. புற்றுநோயை தடுக்கின்றன. தினமும் அவரைக்காய், பாகற்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறியோடு, பச்சை திராட்சைப் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன நோய்கள் நம் பக்கம் வராமல் சென்றுவிடும் என்பது உறுதி.

மஞ்சள் பழமே வருக

மலச்சிக்கலினால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த மஞ்சள் நிறம் ஒரு வரப்பிரசாதம். ஆரஞ்சு, வாழைப்பழம், அன்னாசி, முலாம்பழம் போன்ற மஞ்சள் நிறமுடைய பழங்களை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போயேபோச்சு என்று சந்தோஷமாகச் சொல்லமுடியுமாம்.

தினசரி உணவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமுள்ள பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து வருபவர்களுக்கு குடலில் உள்ள கழிவுப் பொருட்கள் எளிதாக வழியேறுகின்றன. மஞ்சள் நிறமுடைய பழங்களை அப்படியே சாப்பிட்டாலும் சரி, அல்லது பழச்சாறாக எடுத்து ஒரு கப் குடித்தாலும் சரி நல்ல பலனைப் பெறமுடியும்.

பழச்சாறு, அல்லது பழங்கள், இரண்டு ரொட்டித்துண்டுகள், ஒரு கப் நல்ல தயிர், ஆகியவற்றை ஒரு வாரத்திற்கு தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் நீங்குவதோடு, மலச்சிக்கலும் தீர்ந்து விடும் . மஞ்சள் வண்ணப் பழங்கள் பசியைத் தூண்டுகின்றன, நினைவு ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. எனவே பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அதிக அளவில் மஞ்சள் வண்ணப் பழங்களை உட்கொள்வது முதல் மார்க் பெற வழிகாட்டும்.

கடலுக்கும் வானுக்கும் நீலநிறம்

வண்ணங்கள் நம்வாழ்க்கையில் பல இனிய மாறுதல்களை கொண்டுவரும். கடலும், வானமும் நீலவண்ணத்தில் காணப்படுகின்றன. நீல வண்ணம் மனஅமைதி, நிம்மதி ஆகியவற்றின் அறிகுறி. இந்த வண்ணம் நம் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் நீலநிற வண்ணம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நாம் உண்டால் அது நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இதயநோய்களில் இருந்து காக்கவும் செய்கிறது. இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து நீலம், மற்றும் வயலெட் நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செய்த பரிசோதனைகளின் முடிவில் அவர்களது இரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொலஸ்டிரால் குறைந்திருந்தது. மேலும் அவர்களில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் எடைகூடாமலும் காணப்பட்டனர். ஆகவே உடல்எடையைக் குறைப்பதற்கும்,; இதயநோய்களைத் தடுப்பதற்கும் நீலம், மற்றும் வயலெட் நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரிதும் உதவுகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சிவப்பு எதிரி அல்ல

சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவி;ல் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும், சாப்பிட வேஒண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும், பசியை அதிகப்படுத்தும். உணவை வேகமாக சாப்பிட வைப்பதில் இந்த நிறம் கைதேர்ந்தது. சில புற்றுநோய்களைத்; தடுக்கும் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விந்து சுரப்பி புற்றுநோயைத்தடுப்பதில் சிவப்பு நிற தக்காளிக்கு பெரும்பங்கு உண்டு. மேலும் இந்த நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மார்புத் திசைகளை பாதுகாப்பதிலும் பங்கேற்கின்றன.

சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்)சனி ஆகியவை உடல் நலத்திற்கு மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஆரஞ்சு வண்ணம்

ஆரஞ்சு வண்ணத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அது அழகுமட்டும் அல்ல, நமக்குத் தேவையான மருத்துவ குணங்களை ஏராளமாகக்கொண்டு இருக்கிறது.ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் காணப்படும். இந்தவகையான உணவு பொதுவாக கண்பார்வைக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியது. காரணம் இவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் அடங்கி இருக்கிறது.

ஆரஞ்சு வண்ணமுடைய பழங்கள் நுரையீரல், மற்றும் தொண்டையில் ஏற்படும் புற்றுநோய்களை தடுப்பதில் பெரிதும் உதவுகிறது. இவைகள் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கின்றன. இதைத்தவிர இதயநோய்களினால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத்திறனை ஊக்கப்படுத்துகின்றன. ஆகவே மாம்பழம், காரட், பூசனி, வள்ளிக்கிழங்கு, ஆரஞ்சு போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கின்ற பலவண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாக உடல் ஆரோக்கியம் பெறலாம். நோய் எதிர்ப்புத்திறனை அதிக அளவில் அடையலாம். இளமையோடும், இனிமையோடும் ஆனந்தமாக வாழலாம். உணவுப்பொருட்களில் காணப்படும் வண்ணங்கள் பார்வைக்கு மட்டும் அழகாக இருப்பதோடு, உடல் நலத்திற்கும் துணை புரிய வேண்டும். அந்த வகையி;ல் உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களைவிட, காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படும் இயற்கை வண்ணங்கள் மிகச் சிறந்தவை. தினசரி உணவில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் அவசியம்.

2009 01-15 _ன் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியான கட்டுரை

Sunday, November 6, 2011

ராட்சத பனிக்கட்டி

அறிய வேண்டிய அரிய செய்தி
Date: Tuesday, 15 Dec 2009 20:08
கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர்.

பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்.
நன்றி
Author: "நிரூபன் (mjniruban@yahoo.com)" Tags: "உலக எதிரொலி"
Send by mail

Tuesday, November 1, 2011

புலியுடன் உறவாடும் பிஞ்சுக்குழந்தை

ஒரு குழந்தை புலியுடன் உறவாடுகிறது அதைப்பற்றிய தகவல் இது

www.tamilcnn.com பார்க்கவும்.

உண்மையான அன்புக்கு உருவம் கிடையாது - புலியுடன் உறவாடும் பிஞ்சுக்குழந்தை

புலிகூட புன்னகைக்கிறது இந்த பிஞ்சுக்குழந்தையைப்பார்த்து, காட்டு மிருகங்களை ஈவு இரக்கமின்றி காவுகொள்ளும் புலி இங்கு பூனையாகி விட்டது.

குழந்தையும் புலியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவ முயல்கின்றனர் குறுக்கே கண்ணாடி இருப்பதால் தங்கள் மனதுக்குள் உணர்வை பகிர்கின்றனர் இரண்டு வயது தாண்டாத இந்த குழந்தை மிருகக்காட்சி சாலைக்கு பெற்றோருடன் சென்ற போது அங்கிருந்த புலியைப்பார்த்து அந்த இடத்திலையே நின்று விட்டதாம், புலியும் குழந்தை அருகே படுத்தே விட்டதாம். ஒருவேளை முன்ஜென்ம உறவாகக் கூட இருக்கலாம்

சித்தர்களின் அற்புத சக்தி

கூடுவிட்டு கூடு பாய்தல்

போகர் சீனநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் கொங்கணவர், கருவுரூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்களோடு இருந்தார் என்று சொல்வார்கள். போகமுனிவர் சீனநாட்டில் போ-யாங் என்பவரது சீன உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார். சீனநாட்டிலேயே சீனராக வாழ்க்கை நடத்தி வந்தார். இவரை புலிப்பாணி என்பவரே தமிழகத்திற்கு அழைத்து வந்;தார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

பழனியில் போகர் இருந்தபோது ஒரு நாள் அவரது எதிரில் ஒளிபிழம்பு தோன்றியது, அந்த ஒளியில் முருகப்பெருமான் காட்சி அளித்தார் நீ என்னை காணுவது போல மற்றவர்களும் கண்டு தரிசித்து பிறவிப்பயனைப் பெறுவதற்காக ஒரு கோவிலை ஏற்படுத்து, அதில் நவபாஷாணத் திருவுருவத்தை பிரதிஷ்டை செய் என்று கூறி மறைந்து விட்டார்.

முருகன் அருள் செய்தபடியே போகர் கோயிலை உருவாக்கி, அதில் நவபாஷாணங்களை தகுந்த விதத்தில் சேர்த்து முருகன் திருவுருவச் சிலை ஒன்றை வடித்து எடுத்து, அதற்கு அபிஷேகம் செய்தார். விபூதியை தனது உடம்பு முழுவதும் பூசிக்கொண்டார், பஞ்சாமிர்தத்தை அமுதமாக எண்ணி உண்டார். இவை இரண்டும் அவருக்கு அளவில்லாத ஆற்றலையும், உள்ளொளியையும் பெருக்கியது.

தனது சீடர் புலிப்பாணியை அழைத்தார், நான் மூலிகை சேகரிக்கப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றார். சீன தேசம் அடைந்த அவர் பெண்களில் அழகால் கவரப்பட்டு அங்கே சில காலம் தங்கியதாகக் கூறுகின்றனர். இது எந்த் அளவிற்கு உண்மை என்பது புரியவில்லை. ஐம்புலன்களை வென்ற சித்தருக்கு பெண்பித்து பிடித்ததாகக் காட்டுவது எதைக்கருதி என்பது விளங்கவில்லை. அவர் சீன தேசத்திற்கு சென்றதற்கு இதை விடச்சிறந்த காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பாமர மக்கள் தங்களுக்குத் தோன்றிய விஷயங்களையே சேர்த்து கதை திரிப்பது வழக்கம். அந்த வழக்கப்படி அவர் பெண்ணாசை கொண்டு சீனாவில் தங்கியதாக பழங்கதைகள் சொல்கின்றன.

ஆண்டு பல கழிந்தன, தன்னுடைய குரு போகர் தமிழகத்திற்கு திரும்பிவராததால் புலிப்பாணி மனம் வருந்தினார். வேறு ஒருவரை பழனி முருகப்பெருமானுக்கு பூசை செய்யப்பணித்துவிட்டு போகரைத் தேடி இவரும் ஆகாயமார்க்கமாகச்சென்றார். சீன தேசத்தில் தவசக்தி முழுவதையும் இழந்த நிலையில் போகரைக் கண்டார், மனம் வருந்தினார். தன்னுடைய குருவின் நிலைகண்டு உள்ளம் பதைத்தார், ஐயா வாருங்கள் இருவரும் இப்போதே தமிழகம் சென்று விடுவோம் என்றார்.

புலிப்பாணி என் ;தவ வலிமை அத்தனையும் இழந்து விட்டேன், இனிமேல் என்னிடம் ஆகாயமார்க்கமாக பயணம் செய்யும் ஆற்றல் இல்லை என்று தன் நிலையை விளக்கினார் போகர்.

குருவே கவலை வேண்டாம் நான் தங்களை என் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு பறந்து செல்கிறேன் என்ற புலிப்பாணி , போகரை முதுகில் சுமந்து கொண்டு வான்வழியாக தமிழகம் வந்து சேர்ந்தார்.

புலிப்பாணி தனது குருநாதரான போகர் பழைய நிலையை அடையவும், இழந்த தவஆற்றலை திரும்பப்பெறவும் பெரிதும் உதவி செய்தார். நெடுங்காலம் தவம் செய்த போகர் தன் பழைய ஆற்றல்கள்அனைத்தையும் திரும்பப்பெற்றார். பழனியில்; சிலகாலம் வாழ்ந்த அவர் அங்கேயே சமாதி அடைந்தார் என்று நூல்கள்தெரிவிக்கின்றன. அவரது சமாதி பழனி ஆண்டவர் கோயிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இருக்கிறது.