அதிகாரம்
- கல்லாமை – கல்வியைக் கற்காமல் போனால் ஏற்படும்
இழிவும், அதைக் கற்பதால் உண்டாகும் புகழும்.
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் , கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு
கல்வி அறிவு இல்லாதவர்கள் சாதியால், செல்வத்தினால்
மேலான பிறப்பை உடையவர்களாக இருந்தபோதிலும் , சாதியால், செல்வத்தினால் கீழ் நிலையில்
உள்ள படித்து அறிந்த அறிஞர்களைப் போல பெருமை அடைய மாட்டார்கள்.
இதில் இருந்து கல்வி கற்றுவிட்டால் அது எல்லா
வகையான உயர்வையும் கொடுத்து விடும் என்பதை அறிய முடிகிறது. ஐயன் திருவள்ளுவர் வாழ்வில்
நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது. புலவர்
புராணம் என்ற நூல் இந்தக் கதையை சொல்கிறது.
சென்னையை அடுத்த மயிலாப்பூரி்ல் நெசவுத்
தொழிலி்ல் ஈடுபட்டு உழைத்துச் சம்பாதித்து வந்த திருவள்ளுவர் என்னும் தெய்வப்புலவர்
தனது வாழ்க்கையின் அனுபவங்களைத் தொகுத்து அறநூலாகிய திருக்குறளை இயற்றினார்.
அந்தக் காலத்தி்ல் மதுரையில் தமிழ்ச்சங்கம்
ஒன்று இருந்தது. அதி்ல் இருந்த சங்கப்புலவர்கள் பலரும் தமிழ்ப்பயிரை வளர்த்து பெருமை
பெற்றவர்கள். வள்ளுவர் தமது திருக்குறளை சங்கப்புலவர்களிடம் சென்று அரங்கேற்றம் செய்து
அங்கீகாரம் பெற விரும்பினார்.
திருவள்ளுவர் மதுரை சென்று சங்கப்புலவர்களை
சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்கள் நெசவுத் தொழில் செய்யும் இந்த
புலவன் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறான் ? என்ற அலட்சியத்தோடு இருந்தனர். அதோடு
தாழ்ந்த குலத்தி்ல் பி்றந்த வள்ளுவரை அவர்கள் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதிக்க
மறுத்தனர்.
அவர்களைப் பார்த்து திருவள்ளுவர் மிகுந்த
மரியாதையோடு, சங்கப் புலவர்களே !நீங்கள் தமிழாராய்ச்சி செய்வதற்குப் பதிலாக எனது குலத்தையும்
தொழிலையும் ஆராய்ச்சி செய்வது நியாயமானது அல்ல. எனது நூலைக் குறித்து உங்கள் கருத்தை
அறியவே நான் வந்திருக்கிறேன் என்றார்.
அதைக்
கேட்ட புலவர்கள் கடவுள் அருளிய சங்கப்பலகை எங்களுக்குத் துணை புரிகிறது. அந்தப்
பலகை எந்த நூலை ஏற்றுக் கொள்கிறதோ அதை மட்டுமே ஏற்பது எங்கள் வழக்கம் என்றனர்.
உடனே வள்ளுவர் சரி அப்படியே ஆகட்டும், நீங்கள்
அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்த பிறகு, நான் எழுதிய இந்த திருக்குறள் ஏட்டுச் சுவடிகளையும்
அதில் வைப்பதற்கு சிறிது இடம் கொடுங்கள். அந்தப் பொற்பலகை அனுமதிக்குமானால் பிறகு ஆராய்ச்சி
செய்து உங்களது மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் .அது அங்கீகாரம் செய்யாமல் போனால்
என் நூல் குறை உடையது என்பதை நானே அறிந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.
புலவர்கள் இதற்குச் சம்மதித்தனர். அவர்கள்
அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்தனர். பிறகு வள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஏட்டுச் சுவடி
பொற்பலகையில் வைக்கப்பட்டது. உடனே தெய்வப்பலகை, மிகச் சிறிய அளவிற்கு சுருங்கியது.
இதனால் சங்கப்புலவர்கள் அனைவரும் தொபீர் என்று பொற்றாமரைப் பொய்கையில் விழுந்தனர்.
அவர்களுக்கு இடம் தராத சங்கப்பொற்பலகை , தன் மீது திருக்குறளை மாத்தி்ரம் ஏந்திக் கொண்டு மிதந்தது. அவமானம் தாங்க முடியாத சங்கப்புலவர்கள்
தண்ணீரில் விழுந்து நனைந்த உடைகளோடு நீந்தி வந்து கரையேறினார்கள்.
பிறகு அவர்கள் வேறு உடை அணிந்து வந்து திருக்குறளை
ஆராய்ச்சி செய்தனர். தமிழ்தெய்வமே ஒப்புக் கொண்டதை சங்கப்பலகை தெரிவித்த பிறகு வேறு
என்ன சொல்ல வேண்டியிருக்கிறது ? அந்தப் புலவர்கள் பொறாமை இல்லாமல் நூலை ஆராய்ந்து அதில்
உள்ள கருத்துக்களையும், யாவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துகின்ற நீதிகளையும் படித்து
கேட்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டனர். உச்சிமீது வைத்துக் கொண்டாடினர்.
திருக்குறள் எங்கள் தலைக்கனத்தைப் போக்கிவிட்டது,
வள்ளுவர் செய்த முப்பால் எங்களுக்கு நல்லறிவைத் தந்து விட்டது, இனிமேல் நாங்கள் முன்னர்போல
சங்கப்பலகையில் அமர்ந்து தழிழ் ஆராய்ச்சி செய்வது தகாது என்று சொல்லி திருவள்ளுவரையும்
அவர் இயற்றிய திருக்குறளையும் வாயார மனதாரப் போற்றினர்.
வள்ளுவரைப் பார்த்து எங்களை மன்னித்து விடுங்கள்
என்று வேண்டினர். அங்கிருந்த அத்தனை புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாமாலை சூட்டினர்.
அந்தப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்று அழைக்கப்படுகிறது. வள்ளுவர் பூசனை,
மற்றும் வானளாவிய புகழ் ஆகியவற்றோடு திருமயிலைக்கு வந்து சேர்ந்தார். ஆதலால் ஒருவன்
இழிந்த குலத்தில் பிறந்தாலும், கல்வி மாத்திரம் இருக்குமானால் உலகத்தி்ல் உள்ள கல்வி
கற்றவர்கள் அவனைப் போற்றுவது உறுதி.
No comments:
Post a Comment